மின்சாரத் தேவையை நிர்வகிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இலங்கையின் நான்கு வலயங்களில் இன்றும் (21) திட்டமிட்ட மின்வெட்டு தொடரும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
அதன்படி, மாலை 4:30 மணிக்கும் இரவு 9:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், ஒவ்வொரு வலயத்திலும் ஒரு மணிநேரத்திற்கு மின்சார விநியோகம் தடைபடும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையத்தின் (National System Operator – NSO) கோரிக்கையை ஏற்று, திட்டமிட்ட மின் வெட்டினை முன்னெடுப்பதற்கான அனுமதியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நேற்றுமுன்தினம் (19) வழங்கியுள்ளது.
இதற்கு அமைவாக நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் நான்கு வலயங்களாகப் பிரித்து, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இருப்பினும், வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் இடங்களுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
கடந்த சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் தற்போது செயல்பாட்டில் இல்லை.
இதற்கமைய, மின்சார விநியோகத்தைச் சீர்செய்யும் நோக்கில், தினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.













