ஈரானில் போரை நடத்துவதற்காக அமெரிக்க இராணுவம் இதுவரை 47 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளது.
இது, ஜூலை மாதத்தில் பாதுகாப்புத் துறை அளித்த மதிப்பீட்டை விட 25 சதவீதத்திற்கும் அதிகம் என பென்டகன் தரவுகள் தெரிவிக்கின்றன.
பென்டகன் தனது மதிப்பீடு குறித்த கருத்து கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
இந்த மதிப்பீடு பொதுவெளியில் பகிரப்படவில்லை.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கவிருக்கும் நவம்பர் 3 தேர்தலுக்கு முன்னதாக, மக்கள் செல்வாக்கற்ற இந்த மோதலின் அரசியல் பின்விளைவுகளுடன் குடியரசுக் கட்சியினர் போராடிவரும் வேளையில், ஈரான் போரின் அதிகரித்து வரும் செலவு குறித்த இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த யுத்தம் உலகளாவிய எரிசக்திச் செலவுகள் அதிகரித்தது, குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கான ஆதரவைப் பாதித்ததுடன், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கையும் குறைத்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ட்ரம்பின் குடியரசுக் கட்சி மிகக் குறைந்த பெரும்பான்மையையே கொண்டுள்ளது.
பென்டகனின் அண்மைய மதிப்பீட்டின்படி, இந்த யுத்தத்தை நடத்துவதற்கான செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் போரில் பயன்படுத்தப்பட்டு தீர்ந்துபோன வெடிபொருட்களை மீண்டும் நிரப்புவதற்கு மட்டும் 29 பில்லியன் டொலலருக்கும் அதிகமான செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இராணுவ உபகரணங்களை ஈடு செய்யவும், போரின்போது இழந்த விமானங்கள் மற்றும் பல ட்ரோன்கள் உள்ளிட்ட தளவாட இழப்புகளைச் சரிசெய்யவும் 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை தேவைப்படும்.
பெப்ரவரி மாதம், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான போரைத் தொடங்கிய ட்ரம்ப், இந்த மோதல் குறுகிய காலமே நீடிக்கும் என்று கணித்திருந்தார்.
ஈரான் போரில் ட்ரம்பின் ஆரம்பகட்ட உத்தி, முதலில் விலை உயர்ந்த, உயர் ரக துல்லிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈரானின் பாதுகாப்பு அரண்கள் மீது குண்டு வீசுவதில் கவனம் செலுத்தியது.
அதன் பிறகு, வான்வழி ஏவப்படும் JDAM-கள் போன்ற ஈர்ப்பு விசை குண்டுகள் உட்பட, ஏராளமாகக் கிடைக்கும் குறைந்த விலை ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்பதே அதன் நோக்கமாக இருந்தது.
ஆனால், ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தம், ஈரான் தனது நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளைத் தோண்டி எடுப்பதற்கு அவகாசம் அளித்தது.
இதன் மூலம், அணுக முடியாத நிலையில் இருந்த சில ஈரானிய பாதுகாப்பு அரண்களும், ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
அதன்பிறகு, ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வருவாயை முடக்குவதற்காக அதன் மீது கடற்படை முற்றுகையை விதித்துள்ளார்.
மேலும், இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், உத்தரவிடப்பட்டால் கடுமையான சண்டைகளை மீண்டும் தொடங்க பென்டகன் திட்டமிட்டு வருவதாகக் கூறுகின்றனர்.
பென்டகனின் இந்த அண்மைய மதிப்பீடு, போரின் செலவுக்கான 37.5 பில்லியன் டொலர்கள் என பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஜூலை மாதம் மதிப்பிட்டிருந்த மதிப்பீட்டுடன் ஒப்பிடப்படுகிறது.
இந்த புள்ளிவிவரங்களில் விமான செயல்பாடுகள் முதல் சைபர் பாதுகாப்பு ஆதரவு வரையிலான பல்வேறு செயல்பாட்டுச் செலவுகள் அடங்கியிருந்தாலும், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் அமெரிக்கத் தளங்களுக்கு ஏற்படும் சேதங்களைச் சரிசெய்வதற்குத் தேவைப்படும் பெரும் செலவுகள் குறித்து, அமெரிக்க இராணுவத்தின் ஈரான் போர்ச் செலவு மதிப்பீடுகளில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.













