லாகூரில் நேற்று (27) நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இலங்கை, இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியை ஒருநாள் முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேற்றியது.
வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க தனது வாழ்நாள் சிறந்த பந்துவீச்சாக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
அதனைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றி, இறுதிப் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணிக்குத் தேவையான கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
லாகூர் கடாஃபி மைதானத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் குசல் மெண்டிஸ் பந்துவீசத் தீர்மானித்தார்.
அதற்கு அமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி வெறும் 110 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதில் மதுஷங்க 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தான் அணி, மதுஷங்கவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
இலங்கை அணியின் பந்துவீச்சு தாக்குதல் பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையைச் சிதைத்தது.
அந்த அணியால் குறிப்பிடத்தக்க இணைப்பாட்டத்தை உருவாக்க முடியாமல் போனதால், இலங்கை அணிக்கு வெற்றி பெற எளிதான இலக்கே கிடைத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, வெறும் 18.1 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வேகமாக முன்னேறி, பகல்-இரவு ஆட்டத்திற்காக மின்விளக்கு கோபுரங்கள் முழுமையாக இயக்கப்படுவதற்கு முன்பே இலக்கை எட்டியது.
கமிந்து மெண்டிஸ் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
இதில் எட்டு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
தனது கணக்கைத் தொடங்குவதற்கு முன்பு விக்கெட் காப்பாளரால் பிடியெடுப்பு தவறவிடப்பட்டதில் இருந்து ஆரம்பத்தில் தப்பித்த அவர், பின்னர் 44 ஓட்டங்கள் இருந்தபோது களத்தில் எடுக்கப்பட்ட எல்பிடபிள்யூ முடிவை வெற்றிகரமாக மறுபரிசீலனை செய்து அதை மாற்றினார்.
இடதுகை ஆட்டக்காரர் தனது அரை சதத்தை மறக்க முடியாத வகையில் பூர்த்தி செய்தார்; அவர் அடித்த பந்தை, மாற்று பீல்டர் காசி கோரி கேட்ச் பிடிக்கும்போது அவரது கால் எல்லைக் கோட்டைத் தொட்டதால், அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது.
இறுதியாக இலங்கை 18.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 114 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கை கடந்தது.

முன்னதாக ராவல்பிண்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 430 ஓட்டங்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்ததன் மூலம் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிக உயர்ந்த வெற்றிகரமான இலக்குத் துரத்தலாகும்.
இந்த வெற்றி, தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு ஒரு வலுவான பதிலடியாகவும் அமைந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பிடித்துவிட்டது.
இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் அவர்கள் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
மூன்று வெற்றிகள் மூலம் ஆறு புள்ளிகளைப் பெற்று, அவர்கள் லீக் சுற்றை நிறைவு செய்தனர்.
இதற்கிடையில், நான்கு புள்ளிகளைக் கொண்டுள்ள இலங்கை அணி, சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
அதற்கு முன்னதாக, வியாழக்கிழமை நடைபெறும் தங்கள் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இலங்கை அணியின் அபாரமான ஆட்டத்தால், இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















