உக்ரேனின் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை செயலி ஹேக் செய்யப்பட்டதாக கீவ் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ரஷ்யாவின் அவசர எச்சரிக்கை செயலியும் மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் காரணமாக, ட்ரோன் தாக்குதல்கள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்க உதவும் செயலியில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக மொஸ்கோவின் அவசரகால அமைச்சகம் திங்கள்கிழமை (02) அதிகாலை டெலிகிராமில் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
இந்த இணையத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பதை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கீவ் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அணு மற்றும் இரசாயனவியல் அச்சுறுத்தல்கள் குறித்த போலியான எச்சரிக்கைகளையும், தெருக்களில் மோதல்கள் ஏற்படக்கூடும் என்பதற்கான எச்சரிக்கைகளையும் பயனர்கள் பெற்றதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்தது.
உக்ரேனின் மூலோபாயத் தொடர்புகளுக்கான மையமான SPRAVDI எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், இந்த ஹேக்கிங்கிற்கு ரஷ்யாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் குறித்து உக்ரேன் முழுவதும் மக்களுக்கு நிகழ்நேரத்தில் எச்சரிக்கை செய்ய, இந்த வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை செயலி பயன்படுத்தப்படுகிறது.
உக்ரேன் தலைநகருக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தனிச் செயலி, சாதாரணமாக இயங்கி வந்ததாக கீவ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் பிராந்தியத்தின் ஒரு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் உக்ரேன் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இந்த உள்ளூர் அளவிலான போர்நிறுத்தம், இதுவரையிலான போரில் மிக நீண்டதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















