ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தினால் அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெஹ்ரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிராக கூடுதல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க அதிகாரிகள் குறைத்து மதிப்பிட்ட நிலையில், லெபனானின் ஈரான் ஆதரவு ஊடகமான ‘அல் மாயதீன்’ (Al Mayadeen) தொலைக்காட்சியிடம் ரெசாய் பேசினார்.
நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமரசப் போக்கைக் கடைப்பிடிக்கும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ரெஸாயி கூறியுள்ளார்.
அத்துடன், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலாக தொலைதூரத்திலுள்ள அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பயன்படுத்தப்பட்டால், அவையும் இந்த இலக்குகளில் அடங்கும் என்று அவர் மேலும் எச்சரித்தார்.
ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் இருவர் கடந்த மே மாதம் தெரிவித்த தகவலின்படி, ஈரானிடம் உள்ள, ஆயுதத் தயாரிப்புக்கு மிக நெருக்கமான நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என்று ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அணுசக்தியில் இயங்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதற்கு இந்தச் செறிவூட்டப்பட்ட பொருள் எங்களுக்குத் தேவை என்று கூறிய ரெஸாயி, தங்களின் செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருள் நாட்டிலேயே இருக்கும் என்றும், நாங்களே அதைப் பயன்படுத்திக்கொள்வோம் என்றும் மொஸ்கோவிடம் தெஹ்ரான் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் கவலைகளைத் தணிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானிலிருந்து யுரேனியத்தை அகற்றுவதற்கு ரஷ்யா முன்னதாக முன்மொழிந்திருந்தது.
இருப்பினும், அதை அகற்றுவதா வேண்டாமா என்பதை ஈரானே தீர்மானிக்க வேண்டும் என்று ரஷ்யா குறிப்பிட்டது.
2025 ஜூன் மாதம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, ஈரானிடம் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் 440.9 கிலோ கிராம் இருந்ததாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மதிப்பிட்டுள்ளது.
இது குடிமைப் பயன்பாட்டிற்குத் தேவையான அளவை விட மிக அதிகம்.
இதில் எவ்வளவு எஞ்சியுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றன.
ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில், அணுசக்தி தொடர்பான விவகாரங்களும் இடம்பெற வேண்டும் என்று வொஷிங்டன் தெரிவித்துள்ளது.
ஈரான், கட்டார் வழியாக அமெரிக்காவிற்கு அணுசக்தி தொடர்பான முன்மொழிவு ஒன்றை அனுப்பியுள்ளது.
ஆனால், ஈரான் முன்வைத்துள்ள ஏழு கோரிக்கைகளை வொஷிங்டன் நிறைவேற்றிய பின்னரே இது குறித்து விவாதிக்கப்படும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் கடந்த வாரம் கூறியுள்ளார்.














