நியூசிலாந்தின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான The Warehouse Group நிறுவனத்தின் ஒக்லாந்து மற்றும் கிறைஸ்ட்சேர்ச் நகரங்களில் அமைந்துள்ள விநியோக மையங்களில் பணியாற்றும் ஊழியர்களே இந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக கழிவறைக்குச் செல்லும் நேரம் கண்காணிக்கப்படுவதால், சில ஊழியர்கள் களஞ்சியசாலைக்குள்ளேயே மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கழிவறை இடைவேளை எடுத்துக்கொள்ளும் ஊழியர்களுக்கு உயர் நிர்வாகத்தினரால் எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக தொழிற்சங்க அமைப்பாளர் ஹேலி கோர்ட்னி தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கடந்த எட்டு மாதங்களாகப் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொருட்களைத் தெரிவுசெய்யும் பணிகளுக்காகப் பெரிய ரோபோ இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொருட்களின் கையிருப்பைச் சரிபார்க்கும் குழுவில் பணியாற்றும் சில ஊழியர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், பணித்திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களுக்கு ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், இத்தகைய தொழில்நுட்ப மாற்றங்களால் தங்களின் வேலைவாய்ப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

















