இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன என்றும், பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படலாம் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சிமாநாட்டிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்குச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அவரது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சந்திக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமையன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.
இது தொடர்பில் இதன்போது மேலும் கூறிய அவர்,
அமெரிக்கத் தரப்பில் மாற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
புது தில்லி நன்மை பயக்கும், சமநிலையான மற்றும் ஒப்பிடக்கூடிய பொருளாதாரங்களை விட சாதகமான ஒரு ஒப்பந்தத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது – என்றார்.
எதிர்வரும் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மியாமி நகரில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, மோடியும் ட்ரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று ஊகங்கள் நிலவுகின்றன.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், வரிகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும், வரி அல்லாத தடைகளை நீக்கவும், இரு நாடுகளின் சந்தைகளிலும் பரஸ்பர அணுகலை மேம்படுத்தவும் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.













