கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), 86.64 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ (Kush) போதைப்பொருட்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (16) அதிகாலை, போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி மற்றும் கண்டியில் வசிக்கும் 35, 46 வயதுடையவர்கள் என என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தாய்லாந்தில் போதைப்பொருட்களை வாங்கியதாகவும், அதன் பிறகு மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் இன்று நள்ளிரவு 12.00 மணியளவில் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH179 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சந்தேக நபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளில் இருந்த விஸ்கி போத்தல் பெட்டிகளுக்குள், மொத்தம் 8 கிலோ கிராம் 664 கிராம் நிறையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த இரு சந்தேக நபர்களும் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, அவர்களைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவுகள் அங்கு பெறப்படவுள்ளன.













