புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலில், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரிகளை மத்திய அரசு தொடர்ந்து மீளாய்வு செய்து வரும் நிலையில், டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 14 ரூபாயாகவும், விமான எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 12.5 ரூபாயாகவும் இந்திய மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மூன்று வாரங்களுக்கும் குறைவான கால இடைவெளியில் ஏற்றுமதி வரிகள் உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, டீசல் ஏற்றுமதி மீதான விசேட கூடுதல் கலால் வரி (SAED) லிட்டருக்கு 11.5 ரூபாயிலிருந்து 14 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு 11 ரூபாயிலிருந்து 12.5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி தொடர்ந்து பூஜ்ஜியமாகவே உள்ளது.
அதேபோல், விசேட கூடுதல் கலால் வரி மற்றும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி (RIC) ஆகியவையும் தொடர்ந்து பூஜ்ஜிய அளவிலேயே நீடிக்கின்றன.
திருத்தப்பட்ட கட்டணங்கள் நவம்பர் 16 முதல் நடைமுறைக்கு வந்தன.
இதற்கு முன்னதாக, ஒக்டோபர் 31 அன்று மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, டீசல் ஏற்றுமதி மீதான வரியை லிட்டருக்கு ரூ. 8.5-லிருந்து ரூ. 11.5 ஆகவும், விமான எரிபொருள் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 10.5-லிருந்து ரூ. 11 ஆகவும் இந்திய அரசாங்கம் உயர்த்தியிருந்தது.
அதேவேளையில், பெட்ரோல் ஏற்றுமதி மீதான லிட்டருக்கு ரூ. 2.5 என்ற வரியை நீக்கியிருந்தது.
மேற்கு ஆசிய நெருக்கடியின் பின்னணியில், பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றை உள்நாட்டில் தடையின்றி கிடைக்கச் செய்வதற்காக, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது ஏற்றுமதி வரிகள் 2026 மார்ச் 27, அன்று அறிமுகப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒருமுறை இந்த விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
முந்தைய மதிப்பாய்வுக்குப் பிந்தைய காலகட்டத்தில் மசகு எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் சராசரி சர்வதேச விலைகளின் அடிப்படையில் இவை நிர்ணயிக்கப்படுகின்றன.
அண்மைய மாற்றங்கள் ஏற்றுமதிக்கு மட்டுமே பொருந்தும்.
உள்நாட்டு நுகர்வுக்காக அனுமதிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தற்போதைய கலால் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை திருத்தும் முறையானது, உள்நாட்டு சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் போதுமான இருப்பைப் பராமரிக்கும் அதே வேளையில், சர்வதேச எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றுமதி வரிகளை சரிசெய்ய மத்திய அரசுக்கு உதவுகிறது.















