நீர்மட்டங்கள் வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, நான்கு ஆற்றுப் படுகைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மீளப் பெற்றுள்ளது.
இதன்படி, கின் கங்கை, அத்தனகலு ஓயா, களுகங்கையின் குடா கங்கை உப ஆற்றுப் படுகை மற்றும் நில்வள கங்கை ஆகிய ஆற்றுப் படுகைகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் முன்னதாக இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் மழைவீழ்ச்சி நிலைமைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகினால், முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் உறுதியளித்துள்ளது.














