முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சஷி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமுல்படுத்தும் நடவடிக்கைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவன்சவுக்கு, கடந்த 2022 மே மாதம் 27 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
இதனை எதிர்த்து அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி அந்த மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டு, முன்னைய தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, குறித்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
எனினும், அந்த மேன்முறையீட்டையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை தற்போது உறுதியாகியுள்ளது.














