பங்களாதேஷில் தட்டம்மை நோய்ப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை 1,352 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தட்டம்மை அறிகுறிகளுடன் மேலும் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நோயுடன் தொடர்புடைய மொத்த உயிரிழப்புகள் 1,352 ஆக அதிகரித்துள்ளன.
பங்களாதேஷின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் 1,247 பேர் தட்டம்மை பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள். ஏனைய 105 பேரின் உயிரிழப்புகள் ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 1,162 சந்தேகத்திற்கிடமான நோயாளர்களும், 74 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் இதுவரை பதிவான சந்தேகத்திற்கிடமான நோயாளர்களின் எண்ணிக்கை 2,56,586 ஆகவும், ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 26,136 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல் தட்டம்மை அறிகுறிகளுடன் 2,29,530 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 2,20,705 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு தடுப்பூசி விநியோகத் தட்டுப்பாடும், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகளும் காரணமாக அமைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்துடன் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளின் கையிருப்பு தீர்ந்ததாகவும், இதனால் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி விநியோகத்தை தடையின்றி உறுதிப்படுத்துதல், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சமூகத்தினருக்கான தடுப்பூசி திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் நோய்ப் பரவலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.















