ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பா தயாராக இருப்பதாக ஜேர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய தரப்புகளை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான அமைதிப் பேச்சுவார்த்தைகள், எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நியாயமானதும் நீடித்ததுமான அமைதியை ஏற்படுத்துவதே ஐரோப்பாவின் நோக்கம் எனக் குறிப்பிட்ட மெர்ஸ், அமெரிக்காவுடன் இணக்கம் காணப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவும் பங்கேற்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகளின் வான்பரப்பை மீறும் நடவடிக்கைகள் மற்றும் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, போலந்துக்கு ஜேர்மனி முழுமையான ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்த அவர், பால்டிக் கடல் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார். அப்பிராந்தியத்தின் பாதுகாப்பையும் கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2008ஆம் ஆண்டு புக்கரெஸ்ட் உச்சி மாநாட்டின்போது உக்ரைனை நேட்டோவில் இணைப்பதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படாதது தவறான முடிவாக இருந்திருக்கலாம் என மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
அப்போது உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்பட்டிருந்தால் தற்போதைய போரைத் தவிர்த்திருக்க முடிந்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் முடிவடைந்த பின்னர் உக்ரைனுக்கு நேட்டோவின் ஐந்தாவது சரத்துக்கு ஒத்த பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், அத்தகைய உத்தரவாதங்கள் உக்ரைனுக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளின் பாதுகாப்புக்கும் அவசியமானவை எனவும் ஜேர்மன் அதிபர் தெரிவித்துள்ளார்.














