உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, என்விடியா நிறுவனத்தின் பங்கு விலை 31 வீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மீண்டும் சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தைக் குறியீடு 6.5 வீதத்தாலும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 4.75 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலை 19 வீதத்தாலும், ஏ.எம்.டி. நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 7 வீதத்தாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 11.5 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சீன உளவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 12ஆம் திகதி ஜென்சன் ஹுவாங் பதவி விலகியிருந்தார்.
எனினும், இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலப்பகுதியில், என்விடியாவின் பணிப்பாளர் சபை ஏகமனதாக அவரை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கத் தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்குமாறு நிறுவனத்தின் பணிப்பாளர் சபையைத் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அண்மைய பங்கு விலை உயர்வுக்கு மத்தியிலும், ஒரு மாதத்திற்கு முன்னர் பதிவான விலையுடன் ஒப்பிடுகையில் என்விடியாவின் பங்கு விலை இன்னமும் சுமார் 21 வீதம்குறைவாகவே காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகள் எழுந்துள்ள நிலையில், ஜென்சன் ஹுவாங்கின் மீள் நியமனம் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட்டர் ஜீன் ஷஹீன் தெரிவித்துள்ளார்.















