எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்றாலும், அதன் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படாது என இலங்கை அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் போதிய அளவு கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளமையே இதற்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய உற்பத்தி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாதத்தில் பண்டிகைக் காலத்தையொட்டி கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், உறைந்த கோழி இறைச்சி (Frozen Chicken) போதியளவில் கையிருப்பில் இருப்பதால் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், உற்பத்தி வீழ்ச்சியும் சந்தைத் தேவையின் அதிகரிப்புமே விலை உயர்வுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடைத் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மக்காச்சோளத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதற்குப் பதிலாக அரிசி பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் முட்டை உற்பத்தியில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோழிப்பண்ணைகளில் பரவியுள்ள சில வைரஸ் நோய்களும் முட்டை உற்பத்தி குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஒரு முட்டை 39 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் முட்டை விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சந்தையின் கேள்வி மற்றும் விநியோகத்தைப் பொறுத்தே அமையும் எனவும், குறுகிய காலத்திற்குள் முட்டை உற்பத்தியைப் பாரியளவில் அதிகரிப்பது சாத்தியமற்றது எனவும் அஜித் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.














