இந்தியாவில், தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் சர்வதேச இணைய மோசடி மற்றும் மனிதக் கடத்தல் கும்பல் ஒன்று செயல்பட்டு வந்ததைக் கண்டறிந்த பொலிஸார், அங்கிருந்து இந்தோனேசியாவைச் சேர்ந்த 92 பேரையும், மலேசியாவைச் சேர்ந்த 72 பேரையும் மீட்டனர்.
அவர்கள் லாபகரமான தகல் தொழில்நுட்பம் (IT) வேலைகள் பெற்றுத் தருவதாகக் கூறி இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்தப்பட்டதாகவும் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்தனர்.
மலேசியத் தொழிலாளி ஒருவர் தப்பிச் சென்று இந்தச் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தே, இந்தத் திட்டம் அம்பலமானதாகக் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தியாவை வந்தடைந்த பிறகு, தங்கள் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தாங்கள் விருப்பத்திற்கு மாறாக நொய்டாவில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டதாகவும் பல வெளிநாட்டினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நொய்டா என்பது டெல்லியின் புறநகர்ப் பகுதியாகும்; இது வட இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையமாகத் திகழ்வதுடன், பல அழைப்பு மையங்களும் (call centres) இங்கு அமைந்துள்ளன.
விருப்பமுடைய வேலைகளுக்கும் அதிக ஊதியங்களுக்கும் பதிலாக, இணையத்தில் பெண்களாக வேடமிட்டு, ஒன்றும் அறியாத நபர்களை ஏமாற்றி போலியான முதலீட்டுத் தளங்களுக்குள் ஈர்க்குமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய ஒரு மலேசிய நாட்டவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சுமார் 550 டெஸ்க்டொப் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய அளவில் பரந்து விரிந்திருக்கக்கூடிய சைபர் மோசடி வலைப்பின்னல் குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக சைபர் மோசடிச் செயல்கள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதைச் சமாளிக்க பொலிஸாரும் இந்திய வங்கிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு அறிக்கை, அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடி மற்றும் “சமூகப் பொறியியல், கட்டாயப்படுத்துதல் அல்லது ஆள்மாறாட்டம் மூலம் பயனர்களைக் கையாளுதல்” குறித்து எச்சரித்துள்ளது.
இந்தியாவின் தேசிய இணையக் குற்றப் முறைப்பாடு அளிப்பு இணையதளத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2025-ஆம் ஆண்டில் 2.8 மில்லியன் இணைய மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 22,495 கோடி இந்திய ரூபாய் (2.42 பில்லியன் அமெரிக்க டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது 2021-ஆம் ஆண்டிலிருந்து முறைப்பாடுகளில் எண்ணிக்கையில் 4,000%-க்கும் அதிகமான ஒரு வியத்தகு உயர்வாகும்.
பெரும்பாலான வழக்குகள் போலி முதலீடு மற்றும் வர்த்தக மோசடிகள் தொடர்பானவை என்று மத்திய அரசு கூறியது.
போலி முதலீட்டு மோசடிகளில், மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி குழுக்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அணுகி, தங்களை நிதி நிபுணர்களாகக் காட்டிக்கொண்டு அதிக வருமானம் தருவதாக உறுதியளிக்கின்றனர்.
அவர்கள், கற்பனையான லாபங்களைக் காட்டும் போலி வர்த்தகத் தளங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்களை ஈர்க்கின்றனர்.
நம்பிக்கையை வளர்ப்பதற்காக, சிலர் சிறிய தொகையை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் பெரிய தொகையை எடுக்க முயற்சிக்கும்போது, பாதிப்புக்குள்ளாகின்றார்கள் அல்லது மேலும் பணம் செலுத்தும்படி கேட்கப்படுகிறார்கள்.
இறுதியில், மோசடிக்காரர்கள் அவர்களின் பணத்துடன் தலைமறைவாகி விடுகின்றனர்.
அண்மைய மாதங்களில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தொடர்ச்சியான சர்வதேச இணையவழி மோசடி அழைப்பு மையங்களில் நொய்டா வழக்கும் ஒன்றாகும்.
லக்னோ மற்றும் டெல்லியின் பிதாம்புரா பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனைகளும் இதற்கு ஒரு காரணம்.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்கக் குடிமக்களைக் குறிவைத்த ஒரு போலி சர்வதேச அழைப்பு மையத்தில் சோதனை நடத்திய பின்னர், லக்னோ பொலிஸார் 119 பேரைக் கைது செய்தனர்.
அங்குள்ள ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக முக்கிய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்க முகமைகளின் பிரதிநிதிகளாக நடித்ததாகக் கூறப்படுகிறது.
















