திருடப்பட்ட வேனில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (28) எஹெலியகொட, பரகடுவ, அங்குருவங்குவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்றைத் திருடிச் செல்வதாக அதன் உரிமையாளர் இன்று காலை அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த வாகனத்தை இடைமறிக்க முயற்சித்துள்ளனர். எனினும், சந்தேகநபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது, பொலிஸார் மேற்கொண்ட துரத்தலின் பின்னர் பரகடுவ பகுதியில் குறித்த வேனை இடைமறித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், மற்றையவர் பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரைக் கைது செய்யும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
















