ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் கடற்பகுதியில் பயணித்த சரக்குக் கப்பலொன்று கடலுக்கு மேலே மிதப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
குறித்த கப்பலின் அடிப்பகுதிக்கும் கடல் நீருக்கும் இடையில் தெளிவான இடைவெளி காணப்படுவதால், கப்பல் வானில் மிதப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இது பறக்கும் கப்பலோ அல்லது கமராவில் ஏற்பட்ட தந்திரமோ அல்ல எனவும், ‘சுப்பீரியர் மிராஜ்’ (Superior Mirage) எனப்படும் இயற்கையான ஒளியியல் மாயத்தோற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் நிலவும் குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் காற்று அடுக்குகளின் காரணமாக ஒளிக்கதிர்கள் வளைந்து செல்வதால், தொலைவில் உள்ள பொருட்களின் தோற்றம் மாறுபடுகின்றது. இதன் காரணமாகவே கப்பல் கடலுக்கு மேலே மிதப்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.
துபாயைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜசீல் பெரலசேரி இந்தக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வெறும் 20 மணித்தியாலங்களுக்குள் 31 மில்லியன் பார்வைகளையும் சுமார் 1.5 மில்லியன் விருப்பங்களையும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















