அமெரிக்க விமானப்படையின் முக்கிய கிளவுட் கணினி கட்டமைப்பான ‘கிளவுட் ஒன்’ (Cloud One) மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஊடுருவல் காரணமாக, அமெரிக்க விமானப்படையின் முக்கியமான தந்திரோபாயத் தகவல்கள், பணியாளர் விவரங்கள் மற்றும் தளவாடத் தரவுகள் உள்ளிட்ட பெருமளவிலான இரகசியத் தகவல்கள் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில், கிளவுட் ஒன் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது இந்த சைபர் ஊடுருவல் கண்டறியப்பட்டதாக, இந்த விவகாரம் தொடர்பில் அறிந்த மூவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, குறித்த கிளவுட் கட்டமைப்பின் செயல்பாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார், ஊடுருவலின் முழுமையான பாதிப்பு என்ன, அல்லது ஏதேனும் தரவுகள் திருடப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸுக்கு பதிலளித்த அமெரிக்க விமானப்படை, குறிப்பிட்ட வலையமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளின் பாதுகாப்பு நிலை, பாதுகாப்புக் குறைபாடுகள் அல்லது செயல்பாட்டு நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்க விமானப்படையின் தகவல்கள், கட்டமைப்புகள் மற்றும் இராணுவப் பணித்திறன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘கிளவுட் ஒன்’ (Cloud One) திட்டம், அமெரிக்க விமானப்படையின் அனைத்து தகவல் தொழில்நுட்பத் தேவைகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இதற்காக மைக்ரோசொஃப்ட் (Microsoft), அமேசான் (Amazon), ஆரக்கிள் (Oracle) மற்றும் அல்பபெட் (Alphabet) ஆகிய நான்கு நிறுவனங்களின் தொழில்நுட்ப வளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் பணியாளர் விவரங்கள், சம்பளக் கொடுப்பனவுகள், தளவாட முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் நிர்வகிக்கப்படுகின்றன.
அத்துடன், வட அமெரிக்கா முழுவதும் உள்ள வான் பாதுகாப்பு ரேடார் மற்றும் ஏனைய தரவுகளை ஒருங்கிணைக்கும் விமானப்படையின் ‘கிளவுட் அடிப்படையிலான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு’ (Cloud-Based Command and Control) கட்டமைப்பும் இதில் உள்ளடங்குகின்றது.
மேலும், உலகளாவிய ரீதியில் 200க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானப்படை தளங்களில் உள்ள குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் ‘தியேட்டர் இன்டகிரேட்டட் காம்பட் மியூனிஷன்ஸ் சிஸ்டம்’ (Theater Integrated Combat Munitions System) என்ற கட்டமைப்பும் கிளவுட் ஒன் மூலம் இயங்குகின்றது.
கிளவுட் ஒன் திட்டத்தின் பிரதான ஒப்பந்ததாரராக 2026ஆம் ஆண்டு வரை SAIC நிறுவனம் செயற்பட்ட நிலையில், அதன் பின்னர் அந்தப் பொறுப்பை Leidos நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு SAIC நிறுவனம் பதிலளிக்கவில்லை. அதேவேளை, Leidos நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளை அமெரிக்க விமானப்படையிடம் முன்வைக்குமாறு தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய கிளவுட் கணினி கட்டமைப்புகளில் ஒன்றாக கிளவுட் ஒன் விளங்குவதாக இந்த விவகாரம் தொடர்பில் அறிந்த இருவர் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கட்டமைப்பில் இடம்பெறும் பாதுகாப்பு ஊடுருவல் மிகவும் பாரதூரமான விடயம் என தகவல் அறிந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க இராணுவத்தின் சைபர் பாதுகாப்புப் பிரிவான ‘சைபர் கமாண்ட்’ (Cyber Command) விசாரணைக் குழுவினால் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சைபர் கமாண்ட் இதுவரை பதிலளிக்கவில்லை.














