இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை தலவாகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, சில மணித்தியாலங்களில் அவற்றை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா, உடரதெல்ல பகுதியில் தமது ஆதரவாளர்களுடன் சென்று அமைதியின்மையை ஏற்படுத்தியமை மற்றும் நுவரெலிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, அமைச்சரின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் வசமுள்ள துப்பாக்கிகளை தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவிலிருந்தது உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு தலவாகலை பொலிஸ் நிலையத்தில் இருந்து குறித்த உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், தமது துப்பாக்கிகளை தலவாகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
இந்த நிலையில், பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கிகளை மீள உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவிலிருந்து தலவாகலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்றிரவு 11 மணியளவில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் குறித்த துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பிற்காக உயர் பொலிஸ் அதிகாரி அடங்களாக 6 உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.