மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாக அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நெறிமுறை காரணமாக, அவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் போட்டியை பார்வையிட 30,000 ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இது வழக்கத்தை விட 50% குறைவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றினை எதிர்த்துப் போராடுவதில் வெற்றிகண்ட நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலியாவில், ஜனவரி மாதம் மெல்போர்னை வந்தடைந்த வீரர்கள் இரண்டு வாரம் ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளியுடன் கிட்டத்தட்ட 1,200 நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகவும் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் மெல்போர்ன் தலைநகரான விக்டோரியா மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த வாரங்களில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு அவுஸ்ரேலியாவில் புதிய உள்ளூர் கொரோனா தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.