அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எச்1பி விசா விண்ணப்பிப்பதற்கான பதிவுகள் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி முதல் மார்ச் 25ஆம் திகதி வரை நடைபெறும். மார்ச் 31ஆம் திகதிக்குள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.
இதற்கிடையே புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடனின் நிர்வாகம் எச்1பி விசா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை தாமதப்படுத்துவதாக தெரிவித்தது.
இதன்படி, எச்1பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை குலுக்கல் முறையே தொடரும் என்று ஜோ பைடன் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.