மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாங்கூன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள், மையப் பகுதியில் அமைந்துள்ள சுலே ஸ்தூபி அருகே ஒன்றுகூடினர்.
கலைக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். புரட்சியின் அடையாளமான மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, போராட்டங்களை ஒடுக்குவதற்காக இணையதளத்தை இராணுவம் முடக்கினாலும், அது போராட்டத்தின் வளர்ச்சியை பாதிக்கவில்லை.
இராணுவ ஆட்சி திரும்பப் பெற வேண்டும், ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று போராட்டக்கார்கள் வலியுறுத்தினர்.
மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த திங்கட்கிழமை கவிழ்த்து. ஓராண்டுக்கு அவசரநிலை அறிவித்தது. அரசாங்கத்தின் ஆலோசகர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ தலைமை தளபதி மின் ஆங் லயிங்க் தலைமையில் 11 இராணுவ அதிகாரிகள் அடங்கிய ஆட்சி மன்றக் குழு உருவாக்கப்பட்டது.