மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் குறித்த பெண்ணின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி (என்எல்டி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெய் டோ, முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘ஒரு இளைஞன் மார்பிலும், மற்றொரு பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் இலக்கானார். ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை துளைத்து குண்டு பெண்ணின் தலையை காயப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் வென்டிலேட்டரில் வைக்க வேண்டும். காயம் ஒரு உண்மையான குண்டிலிருந்து வந்தது. ரப்பர் குண்டு அல்ல என்று மருத்துவர் கூறினார்’ என கெய் டோ கூறினார்.
மியன்மாரில் உள்ள பொலிஸ்துறையும் இராணுவமும் நாட்டில் நடந்த போராட்டங்கள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
செவ்வாயன்று, அரசாங்கம் பொதுக் கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்ததுடன், தலைநகர், நெய்பிடாவ் மற்றும் மிகப்பெரிய நகரமான யாங்கோன் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.
எனினும், பொலிஸாரின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மர் முழுவதும் போராட்டங்கள் தொடருகின்றன.