ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, டோக்கியோ மருத்துவ மையத்தின் தலைவர் கஜுஹிரோ அராகி முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
இதன்மூலம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதல் ஜப்பானியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முதல் கட்டமாக, முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், அந்த தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என 40,000பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி, மார்ச் 10ஆம் திகதி முதல் போடப்படும்.
சுகாதாரத் துறையினரைத் தொடர்ந்து, முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் அரசாங்கம் உள்ளது.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டிருந்தாலும், அதன் ஆராய்ச்சிகள் தொடக்க கட்டத்திலேயே உள்ளன.
இதனால், அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஜப்பான் அரசாங்கம் இறக்குமதி செய்து, பயன்படுத்தி வருகிறது.