பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் புவிசார் அரசியல் மையம் எனும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வாய்ப்புகளை வெளிக்கொண்டுவரவும் ஆசிய பொருளாதார சங்கத்தின் உறுப்பினராக பிரித்தானியா விண்ணப்பித்துள்ளது குறித்தும் அவரது பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தியா – பிரித்தானியா இடையேயான நட்புறவு அதிகரிக்கும் விதத்திலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை மேம்படும் விதத்திலும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என்று தெரிகிறது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு (எஃப்.டி.ஏ) முன்னோடியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பிரித்தானியா மேம்பட்ட வர்த்தக கூட்டாண்மை (ஈ.டி.பி) குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு பிரித்தானிய பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், குடியரசு தின விழா நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியா செல்லவிருந்த நிலையில், அது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.