மத்திய வங்கியின் பினைமுறி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த 8 பேரும் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தனா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், சந்தேகநபர்கள் கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டால் சந்தேகநபர்கள் அவர்கள் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
2016 மார்ச் மாதம் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கசுன் பலிசேன உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் 8 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்றின் விஷேட நிரந்தர நீதாயம் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.