அவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர்.
குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிட்னியின் வடமேற்கின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கட்டளையிடப்பட்டனர்.
வேகமாக செல்லும் வெள்ளப்பெருக்கு அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் 4,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவுஸ்ரேலியாவின் முக்கிய பிராந்தியங்களில் ஒன்றான ஹண்டர் உட்பட நியூ சவுத் வேல்ஸில் சுமார் 13 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.