மத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், 32பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு அனுப்பப்பட்டன.
இந்த சம்பவம், சோஹாக் மாகாணத்தின் தஹ்தா நகருக்கு அருகே அல்லது தலைநகர் கெய்ரோவிலிருந்து தெற்கே 365 கி.மீ (227 மைல்) தொலைவில் நடந்தது.
ரயில்களில் ஒன்று தெற்கு நகரமான லக்சருக்கும் மத்தியதரைக் கடல் துறைமுகமான அலெக்ஸாண்ட்ரியாவிற்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்தது, மற்றொன்று தலைநகர் கெய்ரோவிற்கும் தெற்கு எகிப்தில் உள்ள அஸ்வான் நகரத்திற்கும் இடையே பயணித்தது.
தெரியாத நபர்கள் முன்னால் ரயிலில் அவசரகால பிரேக்குகளை செயற்படுத்தியதே இந்த விபத்துக்கு காரணம் என நாட்டின் ரயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி கூறுகையில், ‘இந்த விபத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக உறுதியளித்தார்.
எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமாக உள்ளதால் அங்கு அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 2017இல் மட்டும் அங்கு 1,793 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.