சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர்கிரின் கப்பல், பயணப் பாதைக்கு திரும்பியதையடுத்து ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற கப்பல்கள் 3 அல்லது 4 நாட்களில் சூயஸ் கால்வாயை கடந்து செல்லும் என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு வாரகாலமாக போக வழியின்றி சுமார் 422 கப்பல்கள் சிக்கியிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர இரு மார்க்கத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சூயஸ் கால்வாய் வழியாக 113 கப்பல்கள் கடந்து சென்றன.
400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நகரத் தொடங்கியதாக ஞ்ச்கேப் ஷிப்பிங் சர்வீசஸ் தெரிவித்தது.
எவர்கிரின் கப்பல், காற்றின் அதிக வலுக்காரணமாக மிகவும் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றான எகிப்து வழியாக செல்லும் இந்த கால்வாயில் சிக்கிக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து கடுமையான போராட்டத்தின் பின், கப்பல் பயணப்பாதைக்கு திரும்பியது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய் வழியாக பயணிக்க காத்திருந்தன.
அவற்றில் டசன் கணக்கான கொள்கலன் கப்பல்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) அல்லது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) கப்பல்கள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அடங்கும்.