இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வத்தளையைச் சேர்ந்த 85 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, உயர் குருதியழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட் நிமோனியா நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேநேரம், மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
குருதி நஞ்சானமை, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக்
குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 568ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 89 ஆயிரத்து 251 பேர் தொற்றில் இருந்த பூரண குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 887 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 353 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.