ஜோர்தானின் மன்னரான இரண்டாம் அப்துல்லாவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரரும் முன்னாள் பட்டத்து இளவரசருமான ஹம்ஸா பின் உசேன் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தான் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹம்ஸா பின் உசேன், இதுதொடர்பாக காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.
இதில் தான் எந்த தவறையும் செய்யவில்லை. அரசுக்கு எதிராக நடந்த எந்த சதித்திட்டத்துடனும் எனக்கு தொடர்பு இல்லை என கூறியுள்ளார்.
ஜோர்தானை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்த மன்னர் உசேனுக்கும், அவரது 4ஆவது மனைவியான ராணி நூருக்கும் பிறந்த மூத்த மகன்தான் இந்த ஹம்ஸா பின் உசேன்.
1999ஆம் ஆண்டு மன்னர் உசேன் இறந்தபோது, ஹம்ஸா பின் உசேன் மன்னர் பதவிக்கு மிகவும் இளமையாகவும், அனுபவமற்றவராகவும் கருதப்பட்டார்.
இதனால் மன்னர் உசேனின் இரண்டாவது மனைவியான ராணி முனா அல் உசேனின் மூத்த மகன் இரண்டாம் அப்துல்லா மன்னராக முடிசூட்டப்பட்டார்.
எனினும், ஹம்ஸா பின் உசேனுக்கு பட்டத்து இளவரசர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2004ஆம் ஆண்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா, ஹம்ஸா பின் உசேனிடம் இருந்து பட்டத்து இளவரசர் பொறுப்பை பறித்து தனது மூத்த மகனுக்கு வழங்கினார்.
அப்போது முதலே மன்னர் இரண்டாம் அப்துல்லாவுக்கும், ஹம்ஸா பின் உசேனுக்கும் மோதல் போக்கு நிலவி வருகின்றது.