பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழக மக்கள் திரண்டு வாக்களித்து வருகின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர். தேர்தல் ஆணையகம் ஆளும் கட்சிக்குச் சேவை செய்கின்ற நிறுவனமாக இயங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்கெடுப்பை இரத்துச்செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முறைப்பாடளித்திருந்த நிலையில் அதனை தேர்தல் ஆணையகம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில், ஜெயக்குமாரின் இந்தச் செயலுக்குக் கண்டனத் தெரிவித்துள்ள அவர், அப்படிப்பார்த்தால் அ.தி.மு.க.வின் தற்போதைய அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளுக்குமான தேர்தலையும் இரத்துச்செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையகமான தேர்தலை நடத்தும் நிறுவனமாகவே உள்ளதாகவும் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சுய அமைப்பாக இல்லாதமை கவலைக்குரியது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தி.மு.க. கூட்டணியானது அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சிமைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.