யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 460 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்டபடுத்தப்பட்டிருந்தன.
இதனைவிட, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 702 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி முதல் யாழ். நகர்ப் பகுதி மற்றும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்தவாரம் சித்திரைப் புத்தாண்டு வரவுள்ள நிலையில், கால வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே, வர்த்தக நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், பி.சி.ஆர். பரிசோதனைகளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த மற்றைய கடைகளை நாளை காலை முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்றுகூடாத வண்ணம் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.