மே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவை அறிவிக்கும் வகையில் பணிகள் நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்றது. இதனையடுத்து மாதம் 2ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் இருக்குமா என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இதுதொடர்பாக இன்று பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மே மாதம் 2ஆம் திகதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.