ஐ.பி.எல். ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
மும்பை மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டு பிளெஸிஸ் 95 ஓட்டங்களையும் ருத்ராஜ் கெய்க்வார்ட் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 221 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் ஆந்ரே ரஸ்ஸல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், தீபக் சஹார் 4 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 60 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 95 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டு பிளெஸிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.