கொரோனா அச்சுறுத்தல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசத்தை அணியுமாறு பொதுமக்களுக்கும் மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் மற்றும் எய்ம்ஸ் வைத்தியசாலை நிறைவேற்றுப்பணிப்பாளர் டாக்டர் ரந்தீப் குலேரியா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிந்துகொள்வது மிகவும் நல்லது.
அதாவது வீட்டில் மற்றுமொருவருடன் அமர்ந்து பேசும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.
மேலும் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவரை உடனடியாக தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனையவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உடனடியாக முகக்கவசத்தை அணிந்து கொள்வது கட்டாயமாகும்.
தனிமைப்படுத்தலை வீட்டில் மேற்கொள்ள முடியாதவர்கள் உடனடியாக கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு செல்ல வேண்டும்.
இதேவேளை மக்கள் அனைவரும், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். விருந்தினர்களை வீட்டுக்கு அழைக்க வேண்டாம்.
கொரோனாவை பொறுத்த வரையில் 85 சதவீதம் பேருக்கு சாதாரண பாதிப்புக்களே ஏற்படும். காய்ச்சலை மருந்துகள் ஊடாகவும் சாதாரண ஜலதோஷத்தை நீராவி பிடிப்பதன் ஊடாகவும் குணமடைய செய்யலாம்.
இதேவேளை அச்சத்தில் மருந்துகளை பதுக்கி வைக்க வேண்டாம். இதனால் அத்தியாவசிய மருந்துகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுகிறது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.