துருக்கியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 29ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி நாளை மறுதினம் முதல் மே 17ஆம் திகதி வரை முழு பொதுமுடக்கம் அமுலில் இருக்குமென அந்நாட்டு ஜனாதிபதி தாயீப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு நாள் பாதிப்பை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் துருக்கியின் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு முன் அனுமதியுடன் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும் என்றும் மாகாணங்களுக்கு இடையே 50 சதவீத பொதுப் போக்குவரத்து மட்டுமே இயக்கப்படும் என்றும் பாடவாலைகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இதுவரையில் 46 இலட்சத்து 67 ஆயிரத்து 281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தொற்றினால், 38 ஆயிரத்து 711 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.