பொது இடத்தில் முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக் கவசம் அணியாமல் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, பாங்காக் நிர்வாகம் அவருக்கு ஆறாயிரம் பாட் அபராதம் விதித்தது.
தாய்லாந்தில் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 640 டொலர்கள் அபராதம் விதிப்படுகிறது.
தலைநகர் பாங்காக்கில் நோய் பரவல் மிக அதிகமாகப் பரவி வரும் நிலையில், திரையரங்குகள், பூங்காக்கள், மதுபான விடுதிகள், நீச்சல் குளங்கள், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வர்த்தகத் துறைகள் மூடப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை மொத்தமாக 59,687பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 163பேர் உயிரிழந்துள்ளனர்.