அமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது என வடகொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை யோசனையை நிராகரித்த பைடன் நிர்வாகம் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முயல்வதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகளை வடகொரியா நிராகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, தனது விரோதச் செயல்களை மூடிமறைப்பதற்கான ஒரு மோசமான அடையாள அட்டையே இராஜதந்திரம் என வட கொரிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டை நோக்கிய தனது காலாவதியான நிலைப்பாட்டைக் கொண்டு ஒரு பெரிய தவறு செய்துள்ளதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை பைடன் அவமதித்ததாக வட கொரிய வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தம்மைத் தூண்டிவிட்டால் ஏற்படும் பாதிப்பை புரிந்துகொள்ளும் அளவுக்கு அமெரிக்காவை தாங்கள் எச்சரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் அணுசக்தி அபிலாசைகளைக் கட்டுப்படுத்த இராஜதந்திரம் மற்றும் கடுமையான தடுப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவேன் என கடந்த புதன்கிழமை காங்கிரஸில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரான முதல் உரையில் பைடன் கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே, வடகொரியா இவ்வாறு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பதிலளித்துள்ளது.