பிரித்தானியாவின் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஹில் கடந்த மார்ச் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் அழுத்தங்களாலேயே இவர் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற பிரித்தானிய கவுன்சில்களுக்கிடையிலான தேர்தலோடு இணைத்து Hartlepool தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இந்த இடைத் தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கென்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் ஜில் மோர்ட்டிமெர் 15,529 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான தொழிலாளர் கட்சியின் போல் வில்லியம்ஸ் 8,589 வாக்குகளையே பெற்றிருக்கிறார்.
இதுவரை தொழிலாளர் கட்சியின் அசைக்கமுடியாத கோட்டையாக இருந்துவந்த Hartlepool தொகுதியை முதல் தடவை கைப்பற்றி கென்சர்வேடிவ் கட்சி சாதனை படைத்துள்ளது.