கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐ.பி.எல். போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடத் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. 8 அணிகளுக்கிடையிலான 14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9 ஆம் திகதி தொடங்கியது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர்ப் பாதுகாப்பு வளையம் அமைத்து ரசிகர்கள் இன்றி ஆரம்பமான இந்தப் போட்டித் தொடரில் ஆரம்ப நிலை ஆட்டங்கள் சென்னை மற்றும் மும்பையில் நடந்தன. அடுத்து அஹமதாபாத்திலும் டெல்லியிலும் போட்டிகள் நடந்தன. வருகிற 30 ஆம் திகதி வரை இந்தப் போட்டித் தொடர் நடக்கவிருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐ.பி.எல். அணிகளுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி கொரோனா தொற்றுக்குள்ளானார். இதனை தொடர்ந்து ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ரித்திமான் சஹா, டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு பரவியது. இதனால், அந்த அணியினர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அந்த அணிகளின் ஆட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டன.
ஒரே நேரத்தில் 4 அணிகளைச் சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானதால் ஐ.பி.எல். நிர்வாகம் இந்தியக் கிரிக்கெட் சபையுடன் அவசரமாகக் கலந்தாலோசித்து இந்த சீசனுக்கான ஐ.பி.எல். தொடர் காலவரையின்றித் தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது
52 நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐ.பி.எல். தொடரில் 60 போட்டிகள் இடம்பெறவிருந்தன. ஆனால், 24 நாட்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் கங்குலி சில விடயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
“ஐ.பி.எல். தொடரை இந்தியாவில் நடத்த முயன்றது தவறல்ல. இந்த முடிவை எடுத்தபோது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. இங்கிலாந்துத் தொடரை வெற்றிகரமாக நடத்தினோம்.
ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பெப்ரவரியில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இல்லை என்ற நிலைமையில் இருந்தது. எனவே, போட்டிகளை இந்தியாவில் நடத்த ஆரம்பித்தோம். ஆனால், அந்த எண்ணிக்கை கடந்த மூன்று வாரத்தில் மிகவும் உயர்ந்துவிட்டது. கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு யாரும் வெளியேறவில்லை. எனினும் பல வீரர்கள் எதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறுவது கடினமானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.