வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், .யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளாார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 15 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, காரைநகர் பிரதேச வைத்தியசாலை, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள நோதேர்ன் தனியார் வைத்தியசாலை மற்றும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் என தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனைவிட, கிளிநொச்சி தர்ம்புரம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கிளிநொச்சியில் உள்ள கிருஷ்ணபுரம் தொற்று நோயியல் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.