பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவம் இடையிலான மோதல் 7ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இந்த நிலையில், காசா நகரில் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் அரசியல் தலைவரான யஹ்யா சின்வாரின் வீட்டை குண்டு வீசித் தகர்த்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, யஹ்யா சின்வாரின் சகோதரரான முஹமது சின்வாரின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் தலைவரின் வீடு குண்டு வீசி தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தளவாடங்கள் மற்றும் மனிதவள தலைவர்களாக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
யஹ்யா சின்வாரின் வீடு குண்டு வீசித் தகர்க்கப்பட்டதை பாலஸ்தீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் யஹ்யா சின்வார் மற்றும் முஹமது சின்வார் குறித்து உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.