காஸா- இஸ்ரேல் தாக்குதல் தீவிரவமடைந்து வரும் நிலையில், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் காணொளி முறையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காஸா- இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சவுதி வெளியுறவு அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்கான் கூறுகையில், ‘காஸா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் உதவி மற்றும் நிவாரண பொருள்கள் காஸாவை சென்றடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
மேற்கு கரையில் உள்ள ரமல்லாவில் இருந்து பேசிய பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் மால்கி, ‘நிறவெறி அரசான இஸ்ரேல், எங்கள் மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த திங்கள்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை பத்தாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இஸ்ரேலின் கொலை இயந்திரத்தால் எங்கள் மக்கள் சோர்வடைந்துவிட மாட்டார்கள்’ என கூறினார்.