ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே சர்ச்சைக்குரிய எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிரான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முடிவுக்கு அவரது சொந்தக்கட்சியான ஜனநாயகக்கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து செனட் சபையின் வெளியுறவு குழு தலைவரான பாப் மெனண்டெஸ் கூறுகையில், ‘இந்த பொருளாதார தடை இரத்தை திரும்பப்பெற வேண்டும். நாடாளுமன்றத்தினால் கட்டாயப்படுத்தப்பட்ட பொருளாதார தடைகளை ஜோ பைடன் நிர்வாகம் தொடர வேண்டும்.
இந்த முடிவு, ஐரோப்பாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை எவ்வாறு முன்னேற்றும் என்பதை பார்க்க தவறி விட்டனர்’ என கூறினார்.
இதனிடையே முன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவினை ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் வரவேற்றிருந்தார்.
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் ரஷ்ய எரிவாயுத்திட்ட ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இணைந்து ஜேர்மனி மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக ‘நாட் ஸ்டிரீம் 2ஏஜி’ என்ற திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பால்டிக் கடலுக்கு அடியில் ரஷ்ய ஆர்க்டிக்கில் இருந்து ஜேர்மனிக்கு எரிவாயுவை எடுத்துச்செல்லும் இந்த திட்டத்தின் 95 சதவீத பணிகள் முடிந்து விட்டன.
இந்த எரிகுழாய் திட்டம், ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு ஒரு பெரிய புவிசார் அரசியல் பரிசு என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைளுக்கு எதிரானது என்றும், இது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் தீங்கு விளைவிக்கும் திட்டம் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி, கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்தச் சூழலில், இந்த குழாய் எரிவாயு திட்டத்துக்கு எதிரான தடைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளார்.