ஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கு தாங்கள் தடுப்பூசியை விநியோகித்து வருவதாக சீனா, தெரிவித்துள்ளது.
சுமார் 50 கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா உறுதி அளித்துள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளுக்கு விநியோகிக்காமல் தடுப்பூசியை அமெரிக்கா பதுக்கிவைப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தில் ஆபிரிக்க நாடுகளுக்கான பொறுப்பாளரான வூ பெங் கூறுகையில்,
‘சில நாடுகள் தங்களது குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறைவடைந்த பிறகே, பிற நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்க இயலும் என்று கூறியுள்ளன. நாங்களும் சீன மக்கள் அனைவருக்கும் முடிந்த வரையில் விரைவாக கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனாலும், தேவையிருக்கும் இதர நாடுகளுக்கும் எங்களால் முடிந்த வரையில் தடுப்பூசி வழங்கி உதவ முயற்சித்து வருகிறோம்.
அந்த வகையில் ஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கான தடுப்பூசியை நன்கொடையாகவோ அல்லது சாதகமான விலையிலோ விநியோகித்து வருகிறோம். இதுபோன்ற உதவிகளால் மட்டுமே ஆபிரிக்காவில் தடுப்பூசி விவகாரத்துக்கு தீர்வு கண்டுவிட இயலாது. அந்த நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆதரவையும் நாம் வழங்க வேண்டும்’ என கூறினார்.
உலக அளவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியில் 2 சதவீதம் மட்டுமே ஆபிரிக்க கண்டத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்த ஐ.நா., ஆபிரிக்க நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.