தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைத்து அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை தங்களுக்கு சிறு ஆறுதலைத் தருகின்றதென அரசியல் கைதிகளின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “சிறையிலுள்ள எமது உறவுகளின் விடயத்தில், தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்துள்ள ஆரோக்கியமான இந்த செயற்பாட்டினை ஆரம்பப் புள்ளியாகவே நாம் பார்க்கின்றோம். இதனை மனதார வரவேற்கின்றோம்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகள், நாட்டின் சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றுக்குள் கட்டுண்டவர்களாக காணப்படுகிறார்கள். அவர்களின் விடுதலை, ஆளும் அரசாங்கத்தின் அரசியல் விருப்பத்திலேயே தங்கியுள்ளது.
ஆகவே அவர்கள் விடுதலை பெற வேண்டுமென்றால் வேறெங்கும் பேசி பயனில்லை. இவ்வாறு அணிசேர்ந்து மக்கள் பணியாற்றுவதானது, அரசாங்கத்துக்கும் இதர தரப்புகளுக்கு ஒருமித்த மக்களின் பல பிரயோகத்தையும் அவர்களின் விருப்பத்தையும் புரிய வைப்பதாக அமையலாம்.
இத்தகைய பொதுமைப் பண்பின் ஊடாக அவசியப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமாயின் எதிர்காலத்தில் நீண்ட கால அரசியல் தீர்வும் தமிழ் மக்களுக்கு இதேபோன்று சாத்தியப்படலாம்.
அரசியல் கைதிகள் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள்,மக்கள் ஆணையின் சிறப்புரிமையை பயன்படுத்தி, சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை நேரடியாக சந்தித்து ஆற்ற வேண்டிய கருமங்கள் தொடர்பாக கவனம் செலுத்த முடியும்.
மேலும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்பதுடன் இறுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கைதிகளின் விடுதலைக்கான பொதுப்பொறிமுறை ஒன்றினை முன்வைத்து பேச முடியும்.
மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் ஆதரவளிக்கின்ற தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது கூட்டுப்பொறுப்பினை உணர்ந்து செயற்படுவதன் ஊடாக அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கு வாய்ப்புள்ளது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.