ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை கைதுசெய்வதற்காக பெலராஸ் எடுத்த விபரீத முடிவு, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என பிரித்தானியா தங்கள் விமான நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில், ‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத்துறை செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘பயணிகள் விமானத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெலாரஸின் லூகாஷென்கோ அரசாங்கத்துக்கு மேலும் தடைகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பிரித்தானியாவுக்கான பெலாரஸ் தூதருக்கு இதுகுறித்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது’ என கூறினார்.
அத்துடன், ஊடகவியலாளரை விடுதலை செய்வதோடு பெலாரஸ் சிறையில் இருக்கும் மற்ற அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச், கிரேக்க தலைநகர் ஏதென்ஸ் நகரில் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு 171 பயணிகள் பயணித்த ரியான்எயார் நிறுவன விமானத்தில் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு பெலாரஸ் நாட்டு வான் மண்டலம் வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது வலுக்கட்டாயமாக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் தரையிறக்கபட்டு புரோட்டசெவிச், கைதுசெய்யப்பட்டார். அத்துடன் அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
இதன்போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறி பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் நாட்டு அதிகாரிகள், குறித்த பயணிகள் விமானத்தோடு போர் விமானமான எப்.ஆர். 4978 விமானத்தை அனுப்பி வழிமறித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக கடத்தி தரையிறக்கிய பெலாரஸ் அரசாங்கத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.