வானில் இடைநடுவே போர் விமானத்தைக் கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன் இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது.
ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச், கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் இந்த சட்டவிரோத செயலுக்கு பெலாரஸ் பலத்த பின்விளைவுகளை சந்திக்கும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டெர் லியன், எச்சரித்துள்ளார்.
லித்துவேனியா முன்பே பெலாரஸ் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு விமானங்கள் தங்களுடைய வான்வழியே பறப்பதற்கான தடையை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச், கிரேக்க தலைநகர் ஏதென்ஸ் நகரில் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு 171 பயணிகள் பயணித்த ரியான்எயார் நிறுவன விமானத்தில் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு பெலாரஸ் நாட்டு வான் மண்டலம் வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது வலுக்கட்டாயமாக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் தரையிறக்கபட்டு புரோட்டசெவிச், கைதுசெய்யப்பட்டார். அத்துடன் அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
இதன்போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறி பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் நாட்டு அதிகாரிகள், குறித்த பயணிகள் விமானத்தோடு போர் விமானமான எப்.ஆர். 4978 விமானத்தை அனுப்பி வழிமறித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், பயணிகள் விமானத்தை வலுக்கட்டாயமாக கடத்தி தரையிறக்கிய பெலாரஸ் அரசாங்கத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.